ஆதலினால் காதல் செய்வீர்!!!!! (நிபந்தனை உண்டு)
~அபிராமி~ இது செப்டெம்பர் மாதத்தின் தலைப்புச்செய்தி.கடந்த மூன்று வாரங்களாக சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்பட்ட ஒரு பெயர்.சீரழிந்த ஒரு பெயர்.
அபிராமி- அவள் ஒரு பெண்
அபிராமி- அவள் ஒரு தாய்
காதலித்து கரம்பிடித்த 8 வருட திருமண வாழ்வை- தகாத உறவிற்கு விற்று விட்டு ,தன் இரு குழந்தைகளின் உயிரை காவு கொண்டு மோகத்திற்கு விலை போயி இன்று புழல் சிறையில் வாடும் ஒரு மங்கை- அபிராமி.
நடந்தது என்ன என்று விபரிக்க நான் பத்திரிக்கையாளனா என்ன?இங்கு நான் உணர்ந்த சில விடயங்களை படிப்பினைக்காய் பதிவிடுகிறேன்.படியுங்களேன்.....
தமிழில் பாசம்,நேசம்,பரிவு,கருணை,பக்தி,காதல் என்று அன்பிற்கு பல பெயர்கள் இருக்கும்.இவற்றுள் காதலை தவிர மற்ற எல்லாமே எதையும் எதிர்பாராமல் பரிமாறப்படும் ஒருவகை உணர்வுகள் எனலாம்.
ஆனால்,காதல் என்ற உணர்வு சற்று வித்தியாசமானது.அது உளவியல் சார் நெருக்கத்தை தாண்டி உடலியல் சார் உறவை எதிர்பார்க்கும்.வெளிப்படையாக சொல்வதென்றால் "காமம் கலந்த அன்பு" எனலாம்.
மதங்களை தாண்டி இன்று பலரும் திருமணத்திற்கு முன்பே காதலிக்கிறார்கள்.அப்படி காதலிப்பவர்களை முஸ்லீம் பெற்றாரும் ஆதரிப்பதில்லை,கலாச்சார விழுமியங்களை பேணும் மாற்று மத பெற்றாரும் ஆதரிப்பதில்லை.ஏன் தெரியுமா? இவ்வகை காதல் வெறும் மோகம் தான்...மோகத்தின் தேவையே உடல் தான்...தன் தேவை முடிந்தவுடன் மோகம் தீர்ந்துவிடும்..அன்பும் மடிந்துவிடும்....
இந்த காதல் விடயத்தில் கவனமாக இருக்கவேண்டியது பெண்களே...பெரியோர்கள் சொல்வார்களே..."சேலை முள்ளிலே பட்டாலும்,முள்ளு சேலையில் பட்டாலும் சேதம் சேலைக்கு தான்" என்று......
எனவே..முறைப்படி திருமணம் செய்து மணம்முடித்த துணையை மனதால் விரும்பி காதல் செய்வதே உறவின் தர்மம்...
இந்த அபிராமி காதல் செய்து கரம் பற்றிய கணவனையே தூக்கி எறிந்து,தன் குழந்தைகளையே கொன்றுவிடும் அவள் செயல் நமக்கு உணர்த்துவது என்ன?அவளை காமுகி,பதகி,பேய் என்றெல்லாம் திட்டுவது வாஸ்தவம் தான்.எனினும் அவளது தப்பான செயலுக்கு அவள் 80 வீதம் காரணம் என்றால்,20 வீதம் அவளை சார்ந்த குடும்பத்தாருக்கு இருக்கிறது.
"எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவது ஏன்?"....
*அதிகம் சுதந்திரம் கொடுத்த அபிராமியின் கணவன்.
*நமக்கு ஏன் வம்பு என்றிருந்த அவளது அயலவர்கள்..
*தப்பே செய்தாலும் அதை பூசி மெழுகும் பெற்றோர்கள்.
என்று பலர்....
இவர்களையெல்லாம் தண்டிக்க சொல்லவில்லை...புரிந்துகொள்ள சொல்கிறோம்.
டாக்டர் ஷாலினி ஒரு பேட்டியில் கூறுவார்"கணவன்மார்கள் வேலை வேலை என்றிருக்கிறார்கள்...பிசி பிசி என்கிறார்கள்...அவர்கள் ஒன்றை உணர்ந்திட வேண்டும்...உலகில் எல்லா ஆண்களும் பிஸி இல்லை...அப்படிப்பட்ட ஒரு ஆண் உங்கள் மனைவிக்கு அறிமுகமாகும் போது..."சாப்டியா?தூங்குனியா?" என்று கேட்கும் போது...அந்த ஆறுதலை நிரந்தரமாக்கவே அவள் முற்படுவாள்.சாப்பிட கொடுப்பது மட்டும் ஒரு கணவனின் பொறுப்பு இல்லை....அதை தாண்டிய ஆறுதலை காதலை கொடுக்க வேண்டும்" என்கிறார்...
இது ஆண்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட விடயமல்ல...பெண்களுக்கும் பொருந்தும்..இன்று எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வர காரணமே இந்த" தகாத உறவு"எனலாம்.
எனவே,கணவன்மார்களே...
மனைவிமார்களே...
உங்கள் உறவில் எப்போது அன்பு அமாவாசை ஆகிறதோ.....அந்த உறவு இறக்கப்போகிறது என்று அர்த்தம்....
"ஆதலினால்....
காதல் செய்வீர்....."
~ஷாமிலா அப்துல் காதர்~
கருத்துகள்
கருத்துரையிடுக